-->

அறிந்துகொள்வோம் - நாவில் ருசி தெரிவது எப்படி?


 😋 நாவில் ருசி தெரிவது எப்படி? 😋

ருசியை உணரும் உணர்வு அணுக்கள் நாக்கில் சுவை மொட்டுகளில் இருக்கின்றன. இவை ருசியை உணர்ந்து அதை ஒரு தகவலாக உணர்வு நரம்புகளுக்குக் கடத்துகின்றன. அவை ருசி உணர்வுக்கான மூன்றுவித கபால நரம்புகள் வழியாக அதை மூளைக்கு எடுத்துச் செல்கி;ன்றன. 

மூளை அந்த ருசியை உணர்ந்து சொல்கிறது. அது நமக்குப் பிடித்த ருசியாக இருந்தால், இன்னும் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது.

உடனே அந்தத் தகவல் மூளையிலிருந்து இயக்க நரம்புகள் வழியாக உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கு வருகிறது. அதன் பலனாக உமிழ்நீர் அதிகம் சுரக்கிறது. நாம் விரும்பும் உணவை இன்னும் அதிகமாகச் சாப்பிடுகிறோம். இந்தச் செயல் இயல்பாக நாம் உணர்ந்தும் அறிந்தும் செய்வது.


இதற்கான நரம்புப் பாதை எப்படி இருக்கிறது?

👉 'நாக்கு சுவை மொட்டுகள் - சுவை உணர்வு அணு - உணர்வு நரம்பு - கபால நரம்புகள் - மூளை - இயக்க நரம்பு - இயக்க அணு - உமிழ்நீர்ச் சுரப்பி இயக்கம்". இதற்கான தகவல் மையம், மூளை. இதுபோல் உடலில் ஏற்படும் அசைவுகள், எழுதுதல், படித்தல் போன்றவற்றின் உணர்வுகள் தண்டுவடத்தின் வழியாக மூளை வரை சென்று பதிலைப் பெற்றுத் திரும்பும். இதில் பயணம் செய்யும் தகவல் சாதாரணமானதால், அதன் வேகமும் சாதாரணமாகவே இருக்கிறது.

👉 தொடுதல், ருசி போன்ற சாதாரண தகவல்களும், குத்துதல், சுடுதல் போன்ற அவசரத் தகவல்களும் தண்டுவடத்துக்கும் மூளைக்கும் செல்வதாலும், அங்கிருந்து தகவல்கள் மீண்டும் உடலின் பல பாகங்களுக்கும் வருவதாலும்தான் சாத்தியமாகின்றன. இப்படியான தகவல்கள் உடலுக்குள் நரம்புகள் வழியாகவே சென்றுவருகின்றன.

👉 இதுபோல் உடலில் ஏற்படும் அசைவுகள், எழுதுதல், படித்தல் போன்றவற்றின் உணர்வுகள் தண்டுவடத்தின் வழியாக மூளை வரை சென்று பதிலைப் பெற்றுத் திரும்பும். இதில் பயணம் செய்யும் தகவல் சாதாரணமானதால், அதன் வேகமும் சாதாரணமாகவே இருக்கிறது.

👉 அதேநேரம் ஒரு முள் நம் காலில் குத்துகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தகவல் அதிவேகத்தில் செல்லும். ஏனெனில், இது ஓர் அவசரத் தகவல். இந்தப் பாதை ஒரு தனிப் பாதை. முள் குத்தும் தகவலை காலில் உள்ள உணர்வு அணுக்கள் பெற்று உணர்வு நரம்புகளுக்கு அனுப்புகின்றன. அவை தண்டுவட நரம்புகள் வழியாக, அதைத் தண்டுவடத்துக்கு எடுத்துச் செல்கின்றன.

👉 ஆனால், இது மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. காரணம், தகவல் தண்டுவடத்துக்கு வந்து சேர்ந்ததும், 'இது மூளைவரைக்கும் சென்றால் பதில் கிடைக்கத் தாமதமாகிவிடும்" என்று தண்டுவடம் நினைத்து, மூளை எடுக்க வேண்டிய முடிவைத் தானே எடுத்து, 'காலை இழுத்துக்கொள்ளுங்கள்" என்று கால் தசைகளுக்குத் தகவலை அனுப்புகிறது. இது இயக்க நரம்புகள் வழியாகக் கால் தசைகளின் இயக்க அணுக்களுக்குச் செல்கிறது. இயக்க அணுக்கள் கால் தசையை அசைக்கச் செய்கின்றன. உடனே நாம் காலை இழுத்துக்கொள்கிறோம்.

👉 இப்படி ஒரு தகவல் மூளைக்குச் செல்லாமல், தண்டுவடத்துக்குச் சென்றதும் திரும்புகிறது என்றால், அந்த நரம்புப் பாதைக்கு 'அனிச்சை வளைவு" (Reflex Arc) என்று பெயர். 'தசை உணர்ச்சி - உணர்வு அணு - உணர்வு நரம்பு - தண்டுவட நரம்பு - தண்டுவடம் - இயக்க நரம்பு - இயக்க அணு - தசை இயக்கம்" என்று செல்லும் சிறப்புப் பாதை இது. இதற்குரிய தகவல் மையம், தண்டுவடம்.

👉 முள் குத்தியவுடன் நாம் காலை எடுக்க வேண்டும் என்று யோசிப்பதற்கு முன்பாகவே, தண்டுவடம் தன்னிச்சையாக அவசர முடிவெடுத்து, தன்னாலேயே காலை எடுக்க வைப்பதால், இந்தச் செயலுக்கு 'அனிச்சைச் செயல்" (Reflex action) என்று பெயர்.